Karainagar PosuddyMurugan

Welcome To Temple

தொகுப்பு: தம்பையா நடராசா கருங்காலி  

 யாழ் மாவட்டத்திலுள்ள சப்த தீவுகளில் காரைதீவும் ஒன்றாகும். 1869 ம் ஆண்டு பொன்னாலை காரைதீவை இணைக்கும் பாலம் அமைக்கப் பெற்றதனாலும், மட்டக்களப்பிலும், புத்தளம் பகுதியிலும் இப்பெயர் கொண்ட காரைதீவு இருந்த காரணத்தினாலும், யாழ் மாவட்டத்தில் உள்ள இக்காரைதீவினைக் 'காரைநகர்' என மாற்ற வேண்டுமென சேர். பொன். இராமநாதன் அவர்கள் எடுத்த பெருமுயற்சி யினாலும்  12. 09. 1923 இலிருந்து காரைதீவு காரைநகர் ஆயிற்று. இது பலகாடு, கருங்காலி, தங்கோடை, கோவளம், வலந்தலை, களபூமி எனும் கிராமங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இக்கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவம் உண்டு.  

 இக்கட்டுரையின் முக்கிய கருப்பொருளான 'கருங்காலி' என்னும் கிராமத்தைப் பற்றியும் அதன் உள்ளடக்கங்கள் பற்றியும் எழுதுவது சிறப்பாகும். காரைநகரில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் இன்றுவரை பின்தங்கிய கிராமமாகவே இது அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கருங்காலி என்னும் மரங்கள் இருந்த காரணத்தினால் தான் இக்கிராமம் கருங்காலி எனப்பெற்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. ஆனாலும் இதுவரை சரியான காரணம் கண்டறியப்படவில்லை. 

இக்கிராமத்தின் வடக்கெல்லைகளாக வாரிவளவுபகுதியும், பால்குத்திமடம், சின்னமுருகர் கேணி, புல்லந்தோட்டம் என்பனவும் கிழக்கெல்லைகளாக சாத்தா வயல்பகுதியும், பெரியதம்பிரான் கோவிலும், செட்டிதோட்டப் பகுதியும், தென்பகுதி எல்லைகளாக வயல்களும், வியாவில் கிராமமும், மேற்கெல்லை முழுவதுமாக கடற்பகுதியும் அமைந்துள்ளன. அத்தோடு இக் கிராமத்திற்குள்ளே சில உபபிரிவுகளும் அடங்கியுள்ளன. அவை கிளிசை, புளியடி, கேசடை, வேரக்குளம், செட்டிதோட்டம், வேரப்பிட்டி என்பனவாகும். 

 வீரநாராயணன் என்பவன் மாவீரன் வெடியரசன் கீழ் தொல்புரம் என்று விளங்கும் நிலப்பரப்பை இராஜதானியாகக் கொண்டு மேற்கே 'மிருமஞ்சிமலை' என்கின்ற இன்றைய வேரப்பிட்டியில்(வீரநாராயணன்பிட்டி) மண் வீரர்கள் அடங்கிய புழுதி மணற்பிட்டிக் கோட்டையை அமைத்தான் என விஷ்ணு புத்திர வெடியரசன் வரலாறு(எழுதியவர் காரையூர் சிவப்பிரகாசம்) என்னும் நூலில்(1988 பக்.103) கூறப்பட்டுள்ளது. 

Read More

>திருவிழா

>Temple